வந்தது பருவமழை: தொடங்கியது வைர வேட்டை

1 mins read
d8cc05da-d5e2-415e-be96-c415f3b330ac
மழைக்காலத்தில்தான் வைரங்கள் எளிதில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. - படம்: ஊடகம்

அமராவதி: ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே வைரக்கற்கள் கிடைப்பதாகக் கூறப்படுவதை அடுத்து, ஏராளமான மக்கள் அங்கு சென்று வைரவேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ராயலசீமாவில் உள்ள கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பருவமழைக் காலத்தின்போது திரளாகக் கூடுகிறார்கள்.

கர்நூல் மாவட்டம் துக்லி, ஜொன்னகிரி, மத்திகெரா, பகிடிராய், பெரவலி ஆகிய இடங்களிலும் அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் வஜ்ரக்கூர், எம்மிகனூர், கோசி ஆகிய இடங்களிலும்தான் விலை உயர்ந்த வைரங்கள் கிடைப்பதாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.

மழைக்காலத்தில்தான் வைரங்கள் எளிதில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் சில விவசாயிகளுக்கு லட்சம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுவதால், வைரவேட்டையை முழுநேர வேலையாகக் கருதி செய்பவர்களும் உள்ளனர்.

அண்மையில் கர்நூல் மாவட்டம் பெரவலியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்ததாகவும் அதை அவர் உடனடியாக விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மற்றொருவருக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இப்படிப் பல கதைகள் உலவினாலும் எதற்கும் ஆதாரங்கள் என எதுவும் இல்லை. ஆனால் வைர வேட்டை மட்டும் நீடிக்கிறது.

குறிப்புச் சொற்கள்