மும்பை: இந்தியா, பாகிஸ்தானில் பருவமழைக்கு 1,860 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் கனமழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள் போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன. அவ்வட்டாரத்தில் அதிகரித்து வரும் பாதிப்புகளையும் இது காட்டுகிறது.
பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இந்திய துணைக் கண்டம் முழுவதும் கனமழையால் பேரழிவுகளை சந்தித்து வருகிறது.
இந்தியாவின் மலைப்பாங்கான மாநிலமான உத்தரகாண்டில் ஆகஸ்ட் மாதம் திடீரென பெய்த மழையால் ஒரு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த ஒரு மேகவெடிப்புக்கு சுமார் 60 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் நிதி நகரமான மும்பையில் சாலைகள் கால்வாய்களாக மாறியதால் இவ்வாரம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுத்தியது.
பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரே நாளில் 180 பேர் இறந்தனர்.
காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. தெற்காசியாவின் பருவமழை, பொதுவாக விவசாயிகளுக்கு நிவாரணம் தரும். ஆனால் பருவமாற்றத்தால் கடுமையான விளைவுகள் அதிகரித்து வருகின்றன.
அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை, வெள்ளம், வறட்சி, சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் உயிரிழப்பு, சேதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பருவமழை முடிய இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் இதுவரை வழக்கத்திற்கு மாறாக 12 விழுக்காடு அதிக மழை பெய்துள்ளது.
மேலும் இந்திய வானிலை ஆய்வு நிலையம், இவ்வாரம் பல இடங்களில் “கனமழை முதல் மிக கனமழை” பெய்யும் என்று கணித்துள்ளது.
மே மாத இறுதியில் இருந்து இந்தியாவில் 1,109 பேர் இறந்துள்ளதாகவும் ஜூன் 26 முதல் பாகிஸ்தானில் 759 பேர் இறந்துள்ளதாகவும் அண்டை நாடுகளின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் பலர் நீரில் மூழ்கி இறந்தனர். மற்றவர்கள் நிலச்சரிவுகள் அல்லது இடிந்து விழுந்த வீடுகளில் இறந்தனர்.
இந்தியாவில் மட்டும், நீரில் மூழ்கி 484 பேர் இறந்ததாகவும் வெள்ளத்தில் 116 பேர் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில் 50,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நகர்ப்புறத் திட்டமிடல் போதுமானதாக இல்லாததால் நெருக்கடி அதிகரித்துள்ளது. அதிகாரிகள் ஒவ்வோர் ஆண்டும் நிலைமையை சமாளிக்கப் போராடி வருகின்றனர்.