மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள்: மோடி பெருமிதம்

1 mins read
672060e3-06fe-4882-bbde-40f2c36222c4
மலேசியாவில் தமிழ்ப் பள்ளி. - படம்: வர்ணம் மலேசியா

புதுடெல்லி: மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வானொலியில் ஒலிபரப்பாகும் ‘மனத்தின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

“இந்தியப் பண்டிகைகள் உலகின் ஒவ்வோர் மூலையிலும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள் அனைத்து வகையான கலாசாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மலேசியாவில் உள்ள நமது இந்தியச் சமூகமும் இதுதொடர்பாக பாராட்டத்தக்கப் பணியைச் செய்து வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.

மலேசிய தமிழ்ப் பள்ளிகளில் தெலுங்கு, பஞ்சாபி மொழிகளுடன் மற்ற இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்று, கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.

“அதன் பெயர் ‘மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம்’. கடந்த மாதம் மலேசியாவில் ‘லால் பாட் சேலை’ அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சேலைக்கு நமது வங்காளக் கலாசாரத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பு உண்டு.

“இந்த நிகழ்வு, இந்தச் சேலையை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிந்ததற்காக ஒரு சாதனையை நிகழ்த்தியது. இது மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது,” என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்