ஒரே ஆண்டில் 28.2 மில்லியன் இந்தியர்கள் சுற்றுப்பயணம்

2 mins read
dca153ee-2399-42e6-bda5-1fcc3ba09afc
பேங்காக்கின் வாட் அருன் ஆலயத்தில் இந்தியாவின் சுற்றுப் பயணிகள். - கோப்புப் படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியாவின் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன.

குறிப்பாக, புதிய சுற்றுலா அனுபவங்களைப் பெற ஆர்வமாக உள்ளோரை அவை கவர்ந்து வருகின்றன.

சிங்கப்பூரின் டிஸ்னி குரூஸ் என்னும் வியப்பு கலந்த கப்பல் பயணத்துக்கான விளம்பரம் டெல்லி முழுவதும் செய்யப்பட்டு உள்ளது. அதனைக் கண்டு ஆர்வத்துடன் முன்பதிவு செய்ய முயன்ற திருவாட்டி கரிஷ்மா மோகன், 39, பயணம் 2025 டிசம்பரில் தொடங்கும் என்றதும் சற்று பின்வாங்கினார்.

அதனை ஈடுசெய்ய 2025 மார்ச் மாதம் ஜப்பான் செல்ல இருப்பதாகச் சொன்னார் ஏழு வயதுக்கு உட்பட்ட இரு பிள்ளைகளின் தாயாரான அவர்.

திருவாட்டி கரிஷ்மாவின் குடும்பம்போல பல நடுத்தரக் குடும்பங்கள் ஆண்டுக்கு ஒரு வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாவது செல்வதில் ஆர்வமாக உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் இந்தியச் செய்தியாளர் தமது கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

“இந்தியாவில் உள்ள பயனீட்டாளர்கள் சுற்றுப்பயணத்துக்கு அதிகம் செலவிடத் தயாராக உள்ளதால் இனிவரும் ஆண்டுகளில் பயணத்துறை செழிப்பான வளர்ச்சியைக் காணும்,” என்று கூறினார் ‘யூரோமானிட்டர் இண்டர்நேஷனல்’ என்னும் உலக வர்த்தக ஆய்வு நிறுவனத்தின் பகுப்பாய்வாளரான அபய் பிரகாஷ் சிங்.

உலக அளவில் சீனாவைச் சேர்ந்தோரே சுற்றுப்பயணத்துக்கு அதிகம் செலவிடக்கூடியவர்களாக உள்ள நிலையில், இந்தியா அந்தத் துறையில் அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு 11 விழுக்காடு என்னும் விகிதத்தில் வளர்ச்சி காணும் என முன்னுரைக்கப்பட்டு உள்ளது.

உலகச் சுற்றுப்பயண செலவாளிகளின் பட்டியலில் 2019ஆம் ஆண்டு 14வது இடத்தில் இருந்த இந்தியப் பயணிகள் கடந்த ஆண்டு 8ஆம் இடத்துக்கு முன்னேறினர்.

2030ஆம் ஆண்டுக்குள் அவர்கள் 4ஆம் இடத்தை அடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக புக்கிங்.காம் (Booking.com) தெரிவித்து உள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 28.2 மில்லியன் இந்திய சுற்றுப் பயணிகள் விடுமுறையைக் கழிக்க வெளிநாடுகளுக்குச் சென்றனர். அதற்காக அவர்கள் செலவழித்த தொகை US$34.2 பில்லியன் (S$46.3 பில்லியன்) என்று உலகப் பயண மற்றும் சுற்றுலா மன்றம் தெரிவித்து உள்ளது.

ஒப்புநோக்க, சீனாவில் இருந்து கடந்த ஆண்டு 87 மில்லியன் பேர் சுற்றுலா சென்றனர். அந்தப் பயணங்களின்போது அவர்கள் US$196.5 பில்லியன் செலவழித்ததாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்