புதுடெல்லி: இந்தியாவின் தென் மாநில மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகம் இருப்பது அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் 49 மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தைவிட, இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டுக்கான குடிமைப் பதிவு தரவுகளை ஆய்வு செய்தபோது, மக்கள் தொகை தொடர்பான பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தன.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் எந்தவொரு மாவட்டத்திலும் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகமாகப் பதிவாகவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
ஆனால், 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி பார்க்கும்போது, தமிழகத்தில் அப்போது இருந்த 37 மாவட்டங்களில் ஏறக்குறைய 17 மாவட்டங்களில், பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப் புறங்களிலும் இந்த விகிதம் அதிகரித்துக் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டுகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிறப்பைக் காட்டிலும் இறப்பு விகிதம் அதிகமாக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டு ஏழு மடங்காக அதிகரித்துவிட்டது. அதாவது, ஏழு மாவட்டங்களில் இருந்து 49ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில் 75 மாவட்டங்களிலும் மத்தியப் பிரதேசத்தில் 51 மாவட்டங்களிலும் இறப்பைவிட பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல், கர்நாடகாவில் 7 மாவட்டங்கள், கேரளா (6), குஜராத் (5), மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், புதுவை, கோவா ஆகிய மாநிலங்களில் தலா 2 மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகம் பதிவாகி உள்ளது.
மேலும், தெலுங்கானா, ஒடிசா, மணிப்பூர் ஆந்திரா, சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில், தலா ஒரு மாவட்டத்தில், பிறப்பைவிட இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

