கோசி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை

கோசி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை

படங்கள்: தினத் தந்தி

19 Sep 2026 - 7:53 pm

1 mins read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தனது ஒரு மாதக் குட்டியைத் தாய் யானை உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ளது.

ராம்நகர் அருகே உள்ள கார்பெட் வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கோசி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது அப்பகுதியில் இருந்த யானைகள் கூட்டம் ஒன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கோசி ஆற்றைக் கடக்க முயன்றது.

கூட்டத்தில் இருந்த ஒரு மாதமே ஆன குட்டி யானை ஒன்று ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் நிலைதடுமாறி அடித்துச் செல்லப்பட்டது.

தன் கண் முன்னே குட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட தாய் யானை தண்ணீரை எதிர்த்துப் போராடி நீந்திச் சென்றது.

ஒரு சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, தனது தும்பிக்கை மற்றும் கால்களின் துணையோடு குட்டி யானையைப் பாதுகாப்பாகப் பிடித்து இழுத்தது.

பின்னர் அக்குட்டி யானையைத் தாய் யானை ஆற்றின் மேடான கரைப் பகுதியில் பாதுகாப்பாகச் சேர்த்தது.

தாய் யானையின் இந்த நெகிழ்ச்சியான பாசப் போராட்டத்தை அங்கிருந்த வனவிலங்கு ஆர்வலர்கள் தங்களது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்தனர்.

தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தக் காணொளி காட்சி பலரின் கவனத்தையும் ஈர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வெள்ளம்ஆறுவனப்பகுதிவனவிலங்குஉத்தராகண்ட்