ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னால் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாததால் விரக்தியடைந்து, பிறந்து 17 நாள்களே ஆன தனது பெண் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் வீசிக் கொன்றதாக திங்கட்கிழமை (மார்ச் 17) காவலர்கள் தெரிவித்தனர்.
“தனக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்ற விருப்பத்துடன் அந்தப் பெண் இருந்துள்ளார். ஆனால், விருப்பத்துக்கு மாறாக பெண் குழந்தை பிறக்கவே அதனைத் தண்ணீர்த் தொட்டியில் வீசி மூடிவிட்டார்,” என்று காவல்துறையினர் கூறினர்.
கோட்வாலி காவல்நிலைய அதிகாரி நாராயண் சிங் கூறுகையில், “ஸ்ரீராம் காலனியைச் சேர்ந்த ஆச்கி தேவி, 22, தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தை பிறந்ததால் ஞாயிற்றுக்கிழமை தனது 17 நாள் மகளைத் தண்ணீர்த் தொட்டிக்குள் வீசி எறிந்தார்.
“பின்னர், அவர் அந்தத் தொட்டியை மூடிவிட்டதால் குழந்தை இறந்துவிட்டது,” என்று கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் தனக்கு அறிமுகமான ஒருவரிடம் தெரிவித்ததாகவும், இதை அறிந்துகொண்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் காவல் அதிகாரி நாராயண் சிங் கூறினார்.
புகாரின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு திங்களன்று அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

