மும்பை: ஆசியாவின் ஆகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ‘ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்’ நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
அண்மையில் ஜியோ நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு மூலம் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய ரூ.26,500 கோடி) நிதி திரட்டப்பட்டது. இந்தப் பங்குகளுக்காக முதலீட்டாளர்களிடம் இருந்து 77 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கோரிக்கைகள் குவிந்தன.
இதனால் இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே அதிக முதலீட்டாளர்களால் விரும்பப்பட்ட பங்கு வெளியீடாக ‘ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்’ நிறுவனத்தின் பங்கு உருவெடுத்துள்ளது.
புதன்கிழமை (அக்டோபர் 28) மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோதே, ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 108.3 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்மூலம் இந்தியப் பங்குச்சந்தையின் ஆகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ உருவெடுக்கும் எனச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தற்போது ஜியோ நிறுவனம் இந்தியாவில் 53 கோடிக்கும் அதிகமான தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
மெட்டா, கூகல் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவும் முதலீடும் ஜியோவிற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.
இந்தியாவின் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகளில் ‘ஜியோ ஃபிளாட்பார்ம்’ நிறுவன பங்குகள் புதன்கிழமை காலை 10 மணிக்கு பட்டியலிடப்பட்டன.
பங்குகளைப் பெறுவதற்குக் கடும் போட்டி நிலவிய நிலவுவதால், அவற்றின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் பரபரப்பான பொதுப் பங்கு வெளியீட்டுச் (ஐபிஓ) சந்தையில் இந்தியா முன்னிலையில் உள்ள வேளையில், ஜியோவின் புதிய வர்த்தக அறிமுகம் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எனினும், தொலைத்தொடர்புத் துறையில் நிலவும் கடும் போட்டி, புதிய தொழில்நுட்பங்களுக்கான அதிகப்படியான மூலதனச் செலவு, அரசுக் கொள்கை மாற்றங்கள் போன்றவை ஜியோ எதிர்கொள்ள வேண்டிய முக்கியச் சவால்களாக நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.
