திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி, முன்னாள் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உள்ளிட்ட பலருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை நுழைவுச்சீட்டில் மூலம் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அறக்கட்டளை மூலம் வரும் நிதி, வசதி குறைந்த மக்கள் வாழும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில்களைக் கட்டவும் சீரமைக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், முன்னைய நிர்வாகம் அதனைச் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அறக்கட்டளை நிதியில் ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிவில் ஒப்பந்தங்கள் வழங்கியதிலும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை மட்டுமே ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், முன்னைய நிர்வாகம், சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனைக்கு ரூ.77 கோடியையும், கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் வளாகம் கட்ட ரூ. 420 கோடியையும் ஒதுக்கியது.
இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், தேவஸ்தானத்தில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடுகள் விரைவில் வெளியுலகிற்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.