புதுடெல்லி: சீனர் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பல மாநில இணைய மோசடிக் கும்பலை டெல்லி காவல்துறை முறியடித்துள்ளது.
இணையவழி முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் மூத்த குடிமகன் ஒருவரிடம் அக்கும்பல் ரூ.33 லட்சம் (S$47,470) மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) தெரிவித்தார்.
மின்னிலக்க முதலீட்டுத் திட்டம் எனக் கூறி, தம்மிடம் பண மோசடி செய்துவிட்டதாக அந்த 61 வயது மூத்த குடிமகன் காவல்துறையிடம் புகாரளித்தார்.
“அவரை ஏமாற்றிப் பெற்ற பணமானது பல்வேறு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, இறுதியாக போலியான தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுசேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அந்த அதிகாரி விவரித்தார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபம் சிங், டெல்லியைச் சேர்ந்த லக்ஷய் என்ற இருவரும் அந்தப் போலி நிறுவனத்துடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“லக்ஷய் நவம்பர் 19ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவரை விசாரித்ததில், சுபம் மற்றும் பிறரது அறிவுறுத்தலின்பேரில் நிறுவனக் கணக்கு ஒன்றைத் தொடங்கியதை ஒப்புக்கொண்டார்.
“பல வங்கிக் கணக்குகளை உருவாக்கியதாகவும், பல ‘சிம்’ அட்டைகளை வாங்கிக் கொடுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கி மாதம் ரூ.20,000 பெற்றதாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்,” என்றும் அந்த அதிகாரி விளக்கினார்.
இதனையடுத்து, டெல்லியிலும் சுற்றுவட்டாரத்திலும் பல வாரங்களாகச் சுபத்தைக் காவல்துறையினர் தேடிவந்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ‘சிம்’ அட்டையை மாற்றிக்கொண்டே இருந்த சுபம், ஒருவழியாகக் கடந்த சனிக்கிழமை பிடிபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவரிடமிருந்து ஒரு மடிக்கணினி, இரு கைப்பேசிகள், ஐந்து காசோலைப் புத்தகங்கள், ஆறு பற்றட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரை விசாரித்ததில், மோசடி செய்வதற்காக பல போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது தெரியவந்தது.
அத்துடன், யுஎஸ்டிடி எனும் அமெரிக்க மின்னிலக்க நாணயத்தைப் பெற்றதாகவும் அதனைச் சீனர் ஒருவரிடம் விற்றுவிட்டதாகவும் காவல்துறையிடம் அவர் தெரிவித்தார். விசாரணை தொடர்கிறது.

