தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சக்கர நாற்காலி இல்லை; விமானத்திலிருந்து இறங்கி நடந்தே சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்

2 mins read
89784db4-02f7-44fc-86cf-1998f57be2cb
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையம். - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய முனையத்திற்கு நடந்தே சென்ற 80 வயது முதியவர் குடிநுழைவு முகப்பை அடைந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 12) நிகழ்ந்தது.

மாண்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர். அவர் தன் மனைவியுடன் நியூயார்க்கிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக மும்பை சென்றார்.

இருவருமே தங்களுக்குச் சக்கர நாற்காலி தேவை என முன்பதிவு செய்திருந்தனர்.

“சக்கர நாற்காலிப் பற்றாக்குறை காரணமாக, அவர்களில் ஒருவருக்கு மட்டுமே சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. மனைவி சக்கர நாற்காலியில் அமர்ந்துகொள்ள, அவரைத் தொடர்ந்தபடி நடந்து செல்ல கணவர் முடிவுசெய்தார்.

“கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் நடந்து அவர் குடிநுழைவுப் பகுதியை அடைந்தார். அங்கு சென்றதும் அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிச் சரிந்தார். உடனே விமான நிலைய மருத்துவக் கூடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், பின்னர் நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்,” என்று மும்பை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று நியூயார்க்கிலிருந்து அந்த ஏஐ-116 விமானம் மும்பைக்குக் கிளம்பியது.

“அதில் மொத்தம் 32 சக்கர நாற்காலிப் பயணிகள் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு உதவ 15 சக்கர நாற்காலிகள் மட்டும் விமான நிலையத்தில் தயார்நிலையில் இருந்தன,” என்று பெயர் வெளியிட விரும்பாத விமான நிலையப் பணியாளர் ஒருவர் சொன்னார்.

இந்நிலையில், “சக்கர நாற்காலிகளுக்கு அதிகத் தேவை இருந்ததால் அந்தப் பயணியைச் சற்று காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர்தான் தன் மனைவியுடன் நடந்துசெல்ல முடிவுசெய்தார்,” என்று ஏர் இந்தியா பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்விமானம் முற்பகல் 11.30 மணிக்குத் தரையிறங்க வேண்டிய நிலையில் பிற்பகல் 2.10 மணிக்கே மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தது என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்