மும்பையில் மழை: ஐவர் பலி; மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்

மும்பையில் மழை: ஐவர் பலி; மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்

2 mins read
3117d520-5aaa-4efb-b7d4-9d81decbad7a
தாழ்வான பகுதிகளான தாதர், பரேல், ஹிந்த்மாதா, அந்தேரி, கோரேகான் ஆகிய இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாக ஊடகத்தகவல் தெரிவிக்கின்றன. - படம்: பிடிஐ

மும்பை: மும்பையில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அங்கு மழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

தலைநகர் மும்பையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இதையடுத்து மும்பை, தானே, ராய்காட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும் புனே, சதாரா மலைப் பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

கடந்த நான்கு நாள்களில் கனமழை தொடர்பான விபத்துகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்கள் மும்பை, தானே, புனே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை நீடிப்பதால் மும்பையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. அதன் காரணமாக மும்பை நகரிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளான தாதர், பரேல், ஹிந்த்மாதா, அந்தேரி, கோரேகான் ஆகிய இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாக ஊடகத்தகவல் தெரிவிக்கின்றன.

மும்பையில் மெட்ரோ ரயில் சேவைகள் சுமார் 90 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியிருப்பதாகவும் அங்கு சாலை போக்குவரத்து நிலைகுத்தியுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டுமென மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்