தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முரசுக்களம்: நேரடி விமானச் சேவையுடன் இந்தியா-சீனா உறவு புதுப்பிப்பு

3 mins read
508e20bd-7762-415a-8625-f9b52fa3f48c
கடுமையான வேறுபாடுகள் இருந்தபோதும் பொருளியல் உறவைத் தக்கவைப்பது தற்போதுள்ள புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நன்மை பயக்கலாம்.  - படம்: செயற்கை நுண்ணறிவு

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா மீண்டும் நேரடி விமானச் சேவையை தொடங்கவிருக்கிறது. 

அக்டோபர் 26 முதல் கோல்கத்தா - குவாங்ஸோ இடையே நேரடி விமானங்களை இயக்கவிருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பல விமான நிறுவனங்கள் இத்தகைய அறிவிப்புகளை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது, இரு நாடுகளுமே இணைந்து அடியெடுத்து வைத்துள்ள புதிய அத்தியாயமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான எல்லைப் பிரச்சினை நிலவி வரும் நிலையில் இவ்வாண்டு ஆகஸ்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு ஏற்பாட்டு மாநாடு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. 

கவனமான முறையில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் ஆக்கபூர்வமான விளைவுகளில் நேரடி விமானச் சேவைகளும் ஒன்று. ஆகக் கடைசியாக 2020 மார்ச் 20ல், ஏர் இந்தியா விமானம் ஒன்று புதுடெல்லியிலிருந்து ஷாங்காய்க்குச் சென்றது. 

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக இந்தியா - சீனா இடையே நேரடி விமானச் சேவை நிறுத்தப்பட்டது. பிறகு, உலகெங்கும் விமானப் பயணத்துறை வழக்கநிலைக்குத் திரும்பி வந்தபோதும் இந்தியாவும் சீனாவும் அதனைத் தொடரவில்லை. 

கடந்த 2020 ஜூன் 20ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில் தனது வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் 76 வீரர்கள் காயமடைந்ததாகவும் இந்தியா தெரிவித்தது. சீனத் தரப்பில் நான்கு வீரர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளில் அதுவே இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஆகப் பெரும் மோதல் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு, 2020 ஆகஸ்ட் மாதம் லடாக்கிற்கும் மேற்கு திபெத்திற்கும் இடையிலுள்ள பாங்கோங் ஸ்டோ ஏரிப்பகுதியிலும், 2021 ஜனவரியில் சிக்கிம் மாநிலத்திலுள்ள நகு லா பகுதியிலும், 2022 டிசம்பரில் அருணாசலப் பிரதேசத்திலுள்ள டவாங் நகரிலும் மோதல்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவங்களில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும் பதற்றம் நிலவியது.

தவிர, இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா முன்னெடுத்துள்ள பொருளியல் திட்டங்களும் சலசலப்பைக் கூட்டின. வணிகத் தடத் திட்டத்தின்கீழ் சீனா - பாகிஸ்தான் பொருளியல் பாதை, இந்தியா வசமுள்ள காஷ்மீர் பகுதியைக் கடந்து செல்வதை இந்தியா வன்மையாக எதிர்க்கிறது. அத்துடன், இலங்கையிலும் சீனாவின் மறைமுக ஆதிக்கம் இந்தியாவைக் கடுமையாக அதிருப்தி அடையச் செய்துள்ளது. அதே நேரத்தில், மேற்கத்திய வல்லரசுகளுடன் இந்தியா அணுக்கமாக இருப்பதாகவும் சீனா கருதி வந்தது. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இறக்குமதி வரிவிதிப்பை அடுத்து, இந்தியா - சீனா இடையிலான பதற்றம் மெல்லத் தணிய ஆரம்பித்தது.

கடந்த ஆண்டில் மட்டும் தென்கிழக்காசியா உள்ளிட்ட மற்ற நாடுகளை இடைநிறுத்தங்களாகப் பயன்படுத்தி ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணம் செய்தது, நேரடி விமான சேவைக்கான தேவைகளைக் காட்டுகிறது.

கடுமையான வேறுபாடுகள் இருந்தபோதும் பொருளியல் உறவைத் தக்கவைப்பது தற்போதுள்ள புவிசார் அரசியல் சூழலில் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கலாம்.

இரு நாடுகளுக்கும் இடையே விரிவான வணிக உறவு இருக்கிறது. சீனா தயாரிக்கும் இயந்திரங்களும் மின்னணுக் கருவிகளும் இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் முக்கியம்.

இந்நிலையில், மீண்டும் நேரடி விமானச் சேவை தொடங்கவிருப்பது இருநாட்டு மக்கள் இடையிலான தொடர்பை அதிகரிக்கலாம். நேரடிப் பயணங்களால் பயணச் செலவுகள் 15 - 20 விழுக்காடு வரை குறையும்; பயண நேரமும் நான்கு முதல் ஆறு மணிநேரம் குறையும்.  தொழில், சுற்றுலா, கல்வி எனப் பல காரணங்களுக்காக ஏராளமானோர் சென்றுவருவர் என்பதால் இந்த நேரடி விமானச் சேவை, வழக்கநிலை திரும்புவதற்கான முக்கியப் படியாகும். 

இந்தியா-சீனா இடையிலான உறவு மீண்டும் மலரத் தொடங்கியிருப்பது, ஆசியாவிற்கு அப்பாற்பட்ட பகுதிகளிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்ள அவ்விரு நாடுகளுக்குமே உதவலாம். 

குறிப்புச் சொற்கள்