இந்தியாவில் இந்த ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் குற்றச்செயல்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.
குறிப்பாக, இந்தியாவின் பிற மாநிலங்களை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு. தீபாவளியன்றும் அதற்கு மறுநாளும் அந்த மாநிலத்தில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி நாளில் மட்டும் ஒரு காவல்துறை அதிகாரி, இரு பெண்கள், 20 வயதுக்குட்பட்ட மூன்று இளையர்கள் உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒரு செய்தித்தளம், கொல்லப்பட்டவர்கள் என 13 பேரின் படங்களையும் வெளியிட்டுள்ளது. அந்த எண்ணிக்கை 11 என்று சில ஊடகங்களும் எட்டு என காவல்துறையும் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, தேனியில் செந்தில்குமார், 56, என்னும் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், வீதியில் பட்டாசு வெடித்ததைக் கண்டித்ததற்காக கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டதும் முகிலரசு என்னும் காவல்துறை உதவி ஆய்வாளர் கடலூர் அருகே ரவுடிக் கும்பலால் வெட்டப்பட்டதும் பதைபதைப்பை ஏற்படுத்தின.
ஆக, இந்த ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குத்து, வெட்டு, கொலை என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பட்டாசு சத்தத்துக்குப் பதில் பட்டாக்கத்தி சத்தம் அதிகமாகக் கேட்டது. பட்டாசு வெடிப்பது, தகாத உறவு, முன்விரோதம் போன்றவை கொலைக்கான காரணங்கள்.
யூனியன் பிரதேசம் எனப்படும் குறுமாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் 36 மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே சிவப்பு ரத்தம் சிதறிய தீபாவளியைக் கொண்டாடியதாக சில ஊடகங்கள் விமர்சித்துள்ளன. இந்தியாவின் உள்துறை அமைச்சு, ‘ஏன் இத்தனைக் கொலைகள்’ என தமிழ்நாட்டின் ஆளுநரிடம் விளக்கம் கேட்கும் அளவுக்கு இது பெரிய விவகாரமாகி உள்ளது.
மற்றொரு புறம், இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்தைத் தாக்கும் ஆயுதமாக இதனை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வேளையில், பண்டிகைக் காலக் கொலைகள் புதிதல்ல என்கிறார் அமைச்சர் ஒருவர்.
குற்றச்செயல்களும் குடிபோதையும்
இந்நிலையில், கொண்டாட்டத்தில் குடிபோதையும் கலந்துவிடுவதால் குற்றச்செயல்கள் பெருகுவதாக நடுநிலையாளர்கள் பதறுகின்றனர்.
தீபாவளிக் கொலைகள் அதிகரித்ததற்கு மதுபானமே காரணம் என்று அடித்துச் சொல்கிறார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். தீபாவளி மதுபான விற்பனையில் முதலிடம் பிடித்த திருச்சியில் மட்டும் தீபாவளியன்று மூன்று இளையர்கள் கொல்லப்பட்டுள்ளது அவரது கூற்றுக்கு அர்த்தம் சேர்க்கிறது.
அப்படிப் பார்க்கையில், கொலைகள் மிகுந்துள்ளதால் தமிழ்நாட்டில்தான் தீபாவளி நாளில் அதிகம் பேர் குடிக்கிறார்களா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி உள்ளனர்.
தீபாவளி அன்றும் அதற்கு முந்தைய நாளிலும் ரூ.441.38 கோடிக்கு தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நிகழ்ந்துள்ளது. இந்திய அளவில் டெல்லிக்கு அடுத்த அதிக விற்பனை இது. ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் தீபாவளி மது விற்பனை விவரங்களை வெளியிடுவதில்லை. மக்களின் சிந்தனையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை அதனைச் செய்வதில்லை.
வட இந்திய கட்டுப்பாடு
கேரள மாநில மக்கள் தீபாவளியைவிட ஓணம் பண்டிகையை அதிகம் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் எட்டு நாள் கொண்டாட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.96 கோடிக்கு அங்கு மதுபான விற்பனை நிகழ்ந்துள்ளது. தீபாவளி, ஓணம் கொண்டாட்டங்களில் அங்கு பெரிய குற்றச்செயல்கள் நிகழவில்லை. இது ஒருபுறம் இருக்க, தீபாவளியன்று ஆந்திராவில் மூவர், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் என பிற மாநிலங்களிலும் கொலைகள் நிகழ்ந்துள்ளன.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற இந்தியாவின் பெரிய மாநிலங்கள் தீபாவளி நாளில் மதுக்கடைகளைத் திறப்பதில்லை.
தமிழ்நாட்டிலும் தீபாவளியன்று மதுவுக்குத் தடைவிதித்து நிம்மதியைத் தேடலாமே என்று மக்கள்நல ஆர்வலர்கள் யோசனை சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
தீபாவளி வாழ்த்துடன் ஒரு கொலை
தீபாவளியையொட்டி ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு கொலை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெக் மகிந்திரா நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்த பரம்ஜீத் தன்கர், 42, என்பவர் நவம்பர் 6ஆம் தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். உறவினரின் திருமணத்துக்காக முதல் நாள்தான் அவர் சிங்கப்பூரிலிருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத்துக்கு வந்திருந்தார். கார் நிறுத்துவது தொடர்பாக நீண்ட நாள் பகையாளியாக இருந்த அண்டை வீட்டுக்காரரான மோகன் சர்மா என்பவர் பரம்ஜீத்தைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 15 முறை அவர் சுட்டதாகவும் பரம்ஜீத் சுருண்டு விழுந்தபோது, “தீபாவளி வாழ்த்துகள். இன்று எல்லாரையும் சுடுவேன்,” என்று அவர் கத்தியதாகவும் காவல்துறை கூறியது.
