இந்தியா, போலந்து வரலாற்றுத் தொடர்பை நினைவுகூரும் அருங்காட்சியகம்

இந்தியா, போலந்து வரலாற்றுத் தொடர்பை நினைவுகூரும் அருங்காட்சியகம்

படம்: மாலை மலர்

10 Aug 2026 - 7:03 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

அம்மாநிலத்தின் பஞ்சகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சஹ்யாத்ரி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள கோலாப்பூர் நகரில் இந்த அருங்காட்சியகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி கோலாப்பூரில் தஞ்சமடைந்தனர். அந்த வரலாற்றுப்பூர்வ இடப்பெயரை நினைவுகூரும் வகையில் கோலாப்பூர் அருகே உள்ள வாலிவாடேயில் அருங்காட்சியகம் அமைய உள்ளது.

இந்த நடவடிக்கையானது இருதரப்புக்கும் இடையேயான வரலாற்று உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது முதற்கட்டமாக போலந்தைச் சேர்ந்த 1,000 ஆதரவற்ற குழந்தைகளுக்கான குடியிருப்பு நிறுவப்பட்டதாகவும் பின்னர் பெண்கள், முதியோர்களுக்காக 5,000 பேர் வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி வாலிவாடேயில் அமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த இடத்தில்தான் அருங்காட்சியகம் அமைய உள்ளது.

கடந்த வாரம் போலந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்று கோலாப்பூர் அரசக் குடும்பத்தினருடன் இணைந்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசைச் சந்தித்தனர். அப்போது அருங்காட்சியகம் அமைப்பது குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த அருங்காட்சியகம் அமைதி, கருணை, அனைத்துலக நட்புறவை ஊக்குவிப்பதோடு, பகிரப்பட்ட பாரம்பரியத்தை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க அமையும் என்று கோலாப்பூர் மன்னர் சம்பாஜி தெரிவித்தார்.

மேலும், போலந்து நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்தில் இந்தியாவை முக்கியமான, உத்திபூர்வ நட்பு நாடாக அந்நாட்டு மக்கள் கருதுவதாகவும் மன்னர் சம்பாஜி மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்