திருவள்ளூர்: பாஜகவினர் தமிழக வரலாறு, மொழி, கலாசாரம் ஆகியவற்றை அழிக்க நினைக்கிறார்கள் என்றும் அது ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் ராகுல் கூறினார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 18) பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்துக்கு வருகை தந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக மக்களுடன் தாம் ஒருவிதப் பிணைப்பை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 18) பொன்னேரி தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்திற்கு வருவதைத் தாம் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
தமிழக மக்களுடனான தமது உறவு மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமது இதயத்தில் தமிழக மக்களுக்கென்று தனி இடமுண்டு என்றார்.
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. எனினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை தமிழக காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் பிரசாரத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும் என பாஜக நினைப்பதாகத் தெரிவித்த அவர், மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என தாம் நினைப்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் எப்போதெல்லாம் தமிழ் மொழி கலாசாரத்தை தாக்குகிறார்களோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக உணர்ந்திருக்கிறேன்.
“நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதே அத்தரப்பினரின் திட்டம்,” என்றார் ராகுல்.
தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட ஆறு முக்கிய வாக்குறுதிகளை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை, உணவுப் பாதுகாப்புக்காக ஒவ்வோர் குடும்பத்துக்கும் மாதந்தோறும் ரூ.2,500, 300 நாள்களுக்குள் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புதல், முதன்முதலாகச் சொத்து வாங்கும் பெண்களுக்கு இலவசப் பத்திரப் பதிவு ஆகிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இதனிடையே, சனிக்கிழமை மாலை பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் சாலைப் பேரணியில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் தடுப்பரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

