சென்னை: திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்டு செயல்பட்டு வந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர், ‘திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்கீழ், 2022ம் ஆண்டு திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வித் திறன், தொழில்நுட்ப அறிவு, வேலைவாய்ப்பு திறன் மற்றும் தொழில்முனைப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, பல்வேறு முன்னணி அனைத்துலக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் மூலம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்குத் தொழில்துறைத் தேவைகளுக்கேற்பச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன், வளாக நேர்காணல்கள் மூலமாக வேலைவாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிலையில், புதிதாக அமைந்துள்ள விஜய் தலைமையிலான அரசாங்கம், திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது. அத்துடன், மே 15ஆம் தேதிக்கு முந்தைய அனைத்துப் பதிவுகளும் அந்தத் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

