சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாக்கல்செய்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தத் திட்டம், மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என்றும் அதற்கான நிதியுதவியைக் குறைக்கக்கூடாது என்றும் அவர் தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தார். தீர்மானத்தைத் தமிழகச் சட்டமன்றம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசாங்கம் விக்ஷித் பாரத் ஊரக வேலை, வாழ்வாதார உறுதி இயக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழகச் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) திரு ஸ்டாலின், தனித் தீர்மானமொன்றைத் தாக்கல்செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி, கிராமப்புறங்களைச் சேர்ந்தோருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; அத்துடன் மாநிலச் செயல்திறன் அடிப்படையில் நிதி தொடர்ந்து ஒதுக்கப்படுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் முதலியோர் திட்டத்தின் மூலம் பயனடைந்துவந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நிதியுதவியும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வேலைக்கான தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கும் முறையைத் தொடர வேண்டும்; அதன் தொடர்பில் மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசாங்கமே வகுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய திட்டத்தில் மாநில அரசாங்கத்தின் பங்களிப்பு விகிதம் 40 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் மாநில அரசாங்கத்தின் நிதிச்சுமை கூடும். அதைத் திருத்தியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தீர்மானம் குறித்து முதலில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்து பேசினார். அதனையடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். பிறகு, முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பின்வழி நிறைவேற்றப்பட்டது.

