வான் இயற்பியல் அறிவியலாளர் ஜெயந்த் நார்லிகருக்கு வாழ்நாள் சாதனை விருது

2 mins read
e9dc4934-a7f5-4e6d-b670-da5d7389d214
கடந்த மே மாதம், தமது 86 வயதில் காலமான டாக்டர் ஜெயந்த் அண்டவியல் தொடர்பான பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.  - படம்: இணையம்

புதுடில்லி: அண்மையில் மறைந்த இந்தியாவின் அறிவியல் மேதைகளில் ஒருவரான வான் இயற்பியல் அறிவியலாளர் ஜெயந்த் நார்லிகருக்கு அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாழ்நாள் சாதனை விருதான ‘விஞ்ஞான் ரத்னா’ விருது வழங்கப்படுகிறது.

கடந்த மே மாதம், தமது 86 வயதில் காலமான ஜெயந்த் அண்டவியல் தொடர்பான பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர். இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது, உள்பட பல விருதுகளைப் பெற்றவர். எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இவர் சாகத்திய அகடாமி விருதையும் பெற்றுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், ஆய்வாளர்களின் உன்னத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அறிவியல் விருதுகளை இந்திய அரசு கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

நடப்பாண்டிற்கான விஞ்ஞான் ஸ்ரீ விருது பெறுவோரின் பெயர்களை மத்திய அரசு சனிக்கிழமை (அக்டோபர் 25) வெளியிட்டது.

இதில் உயரிய விருதான வாழ்நாள் சாதனை விருது ஜெயந்த் நார்லிகருக்கு அளிக்கப்படுகிறது. அவரது குடும்பத்தினரிடம் விருது வழங்கப்படும்.

‘விஞ்ஞான் ஸ்ரீ’ பிரிவின் கீழ் தமிழகத்தின் உயிர் அறிவியல் பிரிவு அறிஞரான கே. தங்கராஜ் உள்பட எண்மருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளம் அறிவியலாளர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில், ‘விஞ்ஞான் யுவ’ விருதுக்கு சென்னை ஐஐடி-யின் இணை பேராசிரியராக உள்ள மோகனசங்கர் சிவப்பிரகாசம் உள்பட, 14 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அறிவியல் துறையில் குழுவாக செயல்பட்டு சிறந்த பங்களிப்பை அளிக்கும் அமைப்புக்கு வழங்கப்படும் ‘விஞ்ஞான் குழு’ விருதை இந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீரில் லாவெண்டர் மிஷனை முன்னெடுத்த அரோமா மிஷன் குழு பெறுகிறது.

குறிப்புச் சொற்கள்