புதுடெல்லி: இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூன் 13ஆம் தேதிக்குள் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய அளவில் கால வரையற்ற போராட்டம் நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, இந்தியாவில் உள்ள இளையர்கள் இனி எதற்காகவும் அச்சப்படவோ பின்வாங்கவோ மாட்டார்கள் என்றார்.
‘நீட்’ நுழைவுத்தேர்வு, சிபிஎஸ்இ தேர்வு ஆகியவற்றில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் அபிஜீத் தீப்கே தலைமையில் கடந்த 6ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 11) புனே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே மீண்டும் அடையாளப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்நிலையில், மாணவர்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து இந்திய இளையர்கள் இனி மௌனமாக இருக்க மாட்டார்கள் என்று அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.
இதுவரை நீட் தேர்வு தொடர்பான பிரச்சினைகளால் பல மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்றும் நீட், சிபிஎஸ்இ, கியூட் போன்ற தேர்வுகள் தொடர்பான சிக்கல்களால் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்தச் சூழலுக்கு பொறுப்பேற்பதற்கு யாரும் தயாராக இல்லை. அமைச்சரின் பதவி விலகல் குறித்த அறிவிப்பு வராவிட்டால் நாங்கள் நாடு தழுவிய இயக்கத்தைத் தொடங்குவோம்.
தொடர்புடைய செய்திகள்
“வினாத்தாள்கள் கசிகின்றன. கணினி சேவையகங்கள் செயலிழக்கின்றன. மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்கள்?” என்று அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூன் 20ஆம் தேதி நாடு முழுவதிலும் இருந்து இளையர்கள் டெல்லியில் திரண்டு வந்து போராடுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை அவர்கள் திரும்பிச்செல்ல மாட்டார்கள் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாடுதழுவிய போராட்ட அறிவிப்பு இந்தியக் கல்வி அமைச்சருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

