சென்னை: இந்தியா முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பை மேற்கொள்வதற்கான ( எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பு) தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) தொடங்கியுள்ளது.
இந்தத் தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் ராணுவ தாதிமைக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
அதன்படி 2025-26ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக் கிழமை (மே 4) தொடங்கியது.
பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கிய தேர்வு 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
இம்முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது.
தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தீவிரச் சோதனைக்குப் பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நீட் எழுத வந்த மாணவர் ஒருவர் முழுக்கை டீ-சட்டையுடன் வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து காவற்படை அறிவுறுத்தலுக்குப் பின் தந்தை அணிந்திருந்த அரைக்கை டீ-சட்டையை கழற்றிக் கொடுத்தார். அதை போட்டுக் கொண்ட மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.