நீட் மறுதேர்வு வினாத்தாள் விநியோகம்: 200 முறை வானில் பறந்த விமானங்கள்

நீட் மறுதேர்வு வினாத்தாள் விநியோகம்: 200 முறை வானில் பறந்த விமானங்கள்

2 mins read
f02e6d75-bb27-41d0-939a-b15c0c04e346
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) நீட் வினாத்தாள்களுடன் திருநெல்வேலியில் வந்திறங்கிய இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் எம்ஐ-17. - படம்: தி இந்து

புதுடெல்லி: ‘நீட்’ மறுதேர்வுக்கான வினாத்தாள்களை இந்தியா முழுவதும் பாதுகாப்புடன் கொண்டுசேர்க்க இந்திய விமானப் படை விமானங்களும் ஹெலிகாப்டர்களும் கடந்த மூன்று, நான்கு நாள்கள் கிட்டத்தட்ட 200 முறை வானில் பறந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகம் தெரிவிக்கிறது.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்-யுஜி தேர்வு’ நாட்டிலேயே ஆகப்பெரிய தேர்வாகும். மே 3ஆம் தேதி நடைபெற்ற அந்தத் தேர்வை 22 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

ஆனால், வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்ததாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியது. போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன் உச்ச நீதிமன்றம் தலையிடும் அளவுக்குப் பிரச்சினை பெரிதாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதனால், ‘நீட்’ மறுதேர்வு நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ள அந்தத் தேர்வு நாடு முழுவதும் 18 வட்டாரங்களில் நடைபெறுகிறது.

மீண்டும் முறைகேட்டுக்கு இடமளித்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய இம்முறை வினாத்தாள்களைப் பாதுகாப்பாக எடுத்துச்செல்லும் பொறுப்பு இந்திய விமானப் படையிடம் அளிக்கப்பட்டது.

அதற்கான பணி ஜூன் 13ஆம் தேதி தொடங்கியது. அந்தப் படைக்குச் சொந்தமான எம்ஐ-17 ஹெலிகாப்டர்களும் போக்குவரத்து விமானங்களும் முத்திரையிடப்பட்ட வினாத்தாள் பொட்டலங்களைக் கொண்டுசெல்லும் பணியைக் கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் உள்ளன.

குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வினாத்தாள்களைக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கை தொடங்கியதிலிருந்து அவை ஏறத்தாழ 200 முறை வானில் பறந்துள்ளன.

வினாத்தாள்களைப் பெறுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலையங்களில் ஹெலிகாப்டர்களும் விமானங்களும் ஒப்படைத்துள்ள வினாத்தாள்கள் பிரிக்கப்பட்டு, தேர்வு நிலையங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன.

“எவ்விதக் குறையுமின்றி குறித்த நேரத்தில் வினாத்தாள்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்வதே இந்திய விமானப்படையின் விமானம் பயன்படுத்தப்படுவதன் நோக்கம்,” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்