புதுடெல்லி: இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அரசுமுறைப் பயணமாக சீனா செல்கிறார்.
அப்போது இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக நீடித்துவரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனப் புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு நாடுகளுக்கும் இடையே 25வது சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 25ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
இதில் அஜித் தோவலும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். இதற்காக அஜித் தோவல் ஆகஸ்ட் 24ஆம் தேதி சீனா சென்றடைகிறார்.
எல்லைப் பகுதிகளில் இருநாட்டுப் படைகளையும் விலக்கிக்கொள்வது, சுற்றுக்காவல் உரிமைகளை முறைப்படுத்துவது தொடர்பாக அவர், சீனத் தரப்புடன் விரிவாக விவாதிக்க உள்ளார்.
மேலும், ஆகஸ்ட் 27, 28ஆம் தேதிகளில் சீனா நடத்தும் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்திலும் அஜித் தோவல் பங்கேற்கிறார்.


