நேப்பாள வெள்ளம்: சேலையைக் கயிறாக்கி உடன்வந்தோரை மீட்ட தம்பதி

நேப்பாள வெள்ளம்: சேலையைக் கயிறாக்கி உடன்வந்தோரை மீட்ட தம்பதி

3 mins read
c908df8d-5a96-4a81-a028-bd872876f923
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேப்பாளப் பெருவெள்ளத்தில் சிக்கி, தாயகம் திரும்பிய 21 பேர் கொண்ட தமிழகக் குழுவினரை நேரில் சந்தித்தார். - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளில் சிலரை, சேலையைக் கயிறாகப் பயன்படுத்தித் துணிச்சலுடன் மீட்டெடுத்துள்ளனர் மயிலாடுதுறையைச் சேர்ந்த ரத்னகுமார்-பூங்குழலி தம்பதியர்.

கைலாய-மானசரோவர் யாத்திரை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் அடங்கிய குழுவினர், சியாப்ரு முகாமிற்கும் கேருங் பகுதிக்கும் இடையே நேப்பாளத்தில் வீசிய கடுமையான புயல், நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

‘ஐந்து அடி நகர்ந்திருந்தாலும் ஆபத்து’

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு சென்னை திரும்பிய அந்த 21 பேரில் ஒருவரான சிவரஞ்சனி, அந்தத் திகிலூட்டும் அனுபவம் குறித்து ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.

“இந்தியத் தூதரகச் சோதனைச் சாவடி அருகே எங்கள் வாகனம் சேற்றில் சிக்கியது. வாகனம் ஐந்து அடி அளவுக்கு இந்தப்பக்கமோ அந்தப்பக்கமோ நகர்ந்திருந்தாலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்போம். இறையருளால் சரியாக ஐந்து அடி இடைவெளியில் உயிர் பிழைத்தோம்,” என்றார் அவர்.

“வாகனம் ஒரு திருப்பத்தில் நின்றதால், ஓட்டுநர் பக்கமாக வெளியேறினோம். சேறும் சகதியுமான செங்குத்தான மலைப் பகுதி வழுக்கியது. மேட்டுப் பகுதிக்குச் செல்லப் போராடினோம்,” என்று சிவரஞ்சனி நினைவுகூர்ந்தார்.

மயிலாடுதுறை தம்பதியின் துணிச்சல்

மேலும், “அப்போது, மாயவரத்தைச் (மயிலாடுதுறை) சேர்ந்த ரத்னகுமார் - பூங்குழலி தம்பதியர் ஏற்கெனவே பாதுகாப்பான மேடான பகுதிக்குச் சென்றுவிட்டனர். ஆனால், கீழே நான்கைந்து பெண்கள் சேற்றுச் சரிவில் ஏற முடியாமல் தவிப்பதைப் பார்த்த ரத்னகுமார், மீண்டும் ஆபத்தான பகுதிக்கு இறங்கி வந்தார்.

“அவரது மனைவி குளிர் சட்டையை (sweater) அணிந்துகொண்டு உடனடியாகத் தமது புடவையைத் தந்து உதவினார். அதைக் கயிறுபோல உறுதியாகக் கட்டி, மேலே இருந்த பூங்குழலியின் உதவியுடன், சேற்றில் தவித்த பெண்களை ஒவ்வொருவராக மேலே இழுத்து உயிரைக் காப்பாற்றினார் ரத்னகுமார்.

“உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மேலேறிய எவரும் மீண்டும் கீழே இறங்கத் தயங்குவர். ஆனால், ரத்னகுமார் துணிச்சலுடன் இறங்கி வந்து அனைவரையும் காப்பாற்றினார்,” என்று சிவரஞ்சனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தாயகம் திரும்பினர்

உணவும் தண்ணீரும் குறைவாக இருந்தபோதிலும், இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் அக்குழுவினர் தொடர்பில் இருந்தனர். மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால், 48 மணி நேரத்திற்குள் அவர்கள் காத்மாண்டு வழியாகப் பாதுகாப்பாகத் தமிழகம் சென்றடைந்தனர்.

நேப்பாளப் பேரிடரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தத் துணிச்சலான மீட்புச் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தொடரும் துயரம்

இவ்வகையில் சிலர் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தபோதும் இன்னும் பலர் தங்கள் உறவினர்களை, குடும்பத்தினரைக் காணாமல் தவிக்கின்றனர்.

காணாமற்போனோர் பற்றிய தகவலறிய, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் மருத்துவமனைகளையும் பிணவறைகளையும் நாடிச் செல்கின்றனர்.

காணாமற்போனோரின் படங்களைப் பார்வையிடுவோர்.
காணாமற்போனோரின் படங்களைப் பார்வையிடுவோர். - படம்: ராய்ட்டர்ஸ்
புதன்கிழமை (செப்டம்பர் 2), தங்கள் உறவினர் குறித்த தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மருத்துவமனைகளில் காத்திருந்த குடும்பத்தினர்.
புதன்கிழமை (செப்டம்பர் 2), தங்கள் உறவினர் குறித்த தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மருத்துவமனைகளில் காத்திருந்த குடும்பத்தினர். - படம்: ஏஎஃப்பி

கைலாய-மானசரோவர் புனிதப் பயணம் முடித்துத் திரும்பும்போது காணாமற்போன அமெரிக்கப் பெண் ஜீவன் ஜோதியைத் தேடி, அவரின் கணவர் சஞ்சீவ் ராய் காத்மாண்டு சென்றுள்ளார். “அவர் உயிரோடு இருப்பார் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது. மரபணுப் (டிஎன்ஏ) பரிசோதனை முறையிலாவது அவரைக் கண்டறிந்து அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இப்பேரிடரில் காணாமற்போனோரை அடையாளங்காண அவர்களின் உறவினர்களிடமிருந்து ரத்த மாதிரிகளைச் சேகரித்து டிஎன்ஏ தரவுத்தளத்தை நேப்பாளக் காவல்துறை உருவாக்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்