காத்மாண்டு: பல்வேறு சோகச் சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ள நேப்பாளப் பெருவெள்ளம் அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தம்பதியர்க்கு வாழ்நாளில் மறக்க முடியாத அதிர்ச்சி அனுபவத்தைத் தந்துள்ளது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் வசித்து வருகிறார் பட்டாபிராமன் வெங்கடேசன். தன் மனைவி அஞ்சனா ராஜாவுடன் திபெத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அவர், கடந்த 26ஆம் தேதி நேப்பாளத்தின் ரசுவா பகுதியில் பேருந்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சுமார் 70 அடி உயரத்திற்குச் சகதியுடன் கூடிய பெருவெள்ளம் சீறிப் பாய்ந்துவந்துள்ளது.
மிரண்டுபோன பேருந்து ஓட்டுநர், நடத்துநர், உதவியாளர்கள் உள்ளிட்டோர் உடனடியாக வாகனத்தில் இருந்து குதித்துத் தப்பியோடிவிட்டனர்.
என்ன செய்வதெனத் தெரியாமல் சில நொடிகள் தவிப்புக்குள்ளான பட்டாபிராமன், பின்னர் சுதாரித்துக்கொண்டு மனைவி அஞ்சனாவுடன் அருகில் இருந்த செங்குத்தான மலையில் அதிவேகமாக ஏறி உயிர்தப்பினார்.
வெள்ளத்தின் சீற்றத்தைப் பார்த்தபோது, மரணத்தைக் கண் எதிரே உணர்ந்ததாகவும் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் அஞ்சனா தெரிவித்துள்ளார்.
“கரடுமுரடான அந்த மலையில் அவ்வளவு வேகமாக எப்படி ஏறினோம் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், எங்கள் கண் எதிரிலேயே பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு எங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனை இன்னமும் நீங்கவில்லை,” என்று பட்டாபிராம் கூறியுள்ளார்.


