புதுடெல்லி: அனைத்து விமானங்களிலும் 60 விழுக்காடு இருக்கைகளைப் பயணிகளே தேர்வு செய்வதற்கு விமான நிறுவனங்கள் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மேலும், ஒரே முன்பதிவு எண் (PNR) கொண்ட குடும்பத்தார் அல்லது குழுவினர் ஒன்றாக அமர வைக்கப்பட வேண்டும் என்றும் புதிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்திய விமானப் பயணிகளுக்கு இக்குறிப்பிட்ட சலுகைகள் நடைமுறையில் இல்லை. பல விமானங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரே ‘பிஎன்ஆர்’ இருந்தாலும்கூட, வெவ்வேறு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இதனால் அவர்கள் அருகருகே அமர்ந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
பல பயணிகள் இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த போதிலும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இருக்கைகளைத் தேர்வு செய்வதற்கு என விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் காரணமாக விமான நிறுவனங்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து, பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை இந்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.
இனி இருக்கைகளைத் தேர்வு செய்யக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம். மேலும், குடும்பத்தார் பல வரிசைகளில் வெவ்வேறு இருக்கைகளில் அமர வேண்டிய கட்டாயமும் ஏற்படாது.
கூடுதல் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக இந்திய அரசு கூறியுள்ளது.
மேலும், விமானப் பயணம் தொடர்பான விவரங்களைப் பயணிகளுக்கு அவரவர் தாய்மொழியில் வழங்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புதிய அறிவிப்பால் விமானப் பயணம் என்பது எளிதில் அணுகக் கூடியதாகவும் வெளிப்படையானதாகவும் மாறும் என இயக்குநரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

