புதுடெல்லி: இந்தியாவின் மக்களவையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை டிசம்பர் 5ஆம் தேதி முன்மொழிந்தார்.
வேலை நேரத்திற்குப் பின்னர் அலுவலகம் தொடர்பில் வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியதில்லை என்பதே அந்தப் புதிய மசோதாவின் முக்கிய அம்சமாகும்.
‘தொடர்புத் துண்டிப்பு உரிமை 2025’ (Right to Disconnect, 2025) என இந்தப் புதிய மசோதா அழைக்கப்படுகிறது.
அலுவலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டையும் சமமாகக் கையாள ஊழியர்களுக்கு இந்தப் புதிய மசோதா உதவும் என சுப்ரியா சுலே கூறுகிறார்.
இந்த மசோதா சட்டமானால், பணி நேரம் முடிந்தபிறகு ஊழியர்களைப் பணிசெய்யுமாறு கட்டாயப்படுத்தும் அலுவலகங்கள்மீது அபராதம் விதிக்கப்படலாம். அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்யும் நிறுவனங்களுக்குத் தண்டனையும் வழங்கப்படலாம்.
இன்றைய மின்னிலக்கக் காலத்தில் இந்த மசோதா மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே, பணிச்சுமை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது மிகவும் உதவும் எனச் சொல்லப்படுகிறது.

