புதுடெல்லி: பாகிஸ்தானின் லாகூர் நகரைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியத் தலைநகர் புதுடெல்லி வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) உலகின் ஆக அதிகம் மாசடைந்த நகரமானது.
20 மில்லியன் மக்கள் வாழும் அந்நகரைப் புகைமூட்டம் சூழ்ந்ததால் காற்றின் தரம் அபாய நிலையை எட்டியதோடு, பார்வைத்திறனும் குறைந்தது.
நுண்துகள்களின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு காற்றின் தரத்தை அளவிடும் சுவிஸ் அமைப்பான ஐகியூஏர், புதுடெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 334 ஆகப் பதிவாகி அபாயக் கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்தது.
50 வரையிலான காற்றுத் தரக் குறியீட்டு அளவு, உடல்நலப் பாதிப்பற்ற நல்ல நிலையாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதுடெல்லியின் குறியீட்டை 403 ஆகக் கணிக்கிட்டு, அதனைத் தீவிர நிலையாக வகைப்படுத்தியது.
காற்று மாசு அளவுகளைக் கணக்கிடும் முறைகளும் அளவுகோல்களும் வேறுபடுவதால் இரு அமைப்புகளின் அளவீடுகளும் மாறுபடுகின்றன.
கடும் புகைமூட்டத்திற்கு இடையே கார்கள், மோட்டார்சைக்கிள்கள் சென்றதையும் முக்கியச் சாலைகளில் தெருவிளக்குகள் மங்கலாகத் தெரிந்ததையும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் காணொளிகள் காட்டின.
வாகனப் புகை, கட்டுமானத் தூசு, விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை ஆகியவற்றைக் குளிர்காலத்தின் அடர்ந்த காற்று வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்துவதால், வட இந்தியாவிலும் அண்டை நாடான பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் காற்று மாசுபாடு பருவகாலப் பிரச்சினையாக உள்ளது.
