புதுடெல்லி: சீன குடிமக்களுக்கென புதிய மின் வணிக விசா நடைமுறையை இந்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
விண்ணப்பித்த 45 முதல் 50 நாள்களுக்குள் இந்த விசா வழங்கப்படும் என்றும் இந்தியாவில் ஆறு மாதங்கள் வரை தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசா ‘eB-4’ எனக் குறிப்பிடப்படுகிறது.
சீனாவில் இருந்து குறிப்பிட்ட வணிக நடவடிக்கைகளுக்காக இந்தியா வரும் சீன வணிகர்களும் இயந்திரங்களை நிறுவுதல், இயக்குதல், உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப பணிகள் ஆகியவற்றுக்காக இந்தியா வரும் சீன நாட்டினரும் இந்த விசாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரக இணையத்தளத்தில் இந்த விசா குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த eB-4 விசாவை நேரடியாகத் தூதரகத்தில் இருந்தும் முகவர்கள் உதவியின்றி இணையம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் மீண்டும் இருதரப்பு உறவுகளைக் கட்டமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்தப் புதிய நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

