பொதுமக்களிடம் யுபிஐ கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க புதிய கண்காணிப்பு நடைமுறை

பொதுமக்களிடம் யுபிஐ கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க புதிய கண்காணிப்பு நடைமுறை

அக்டோபர் 15ஆம் தேதி நடப்பிற்கு வரும் என எதிர்பார்ப்பு
படம்: இந்து தமிழ் திசை

19 Sep 2026 - 2:06 pm

2 mins read

புதுடெல்லி: பொது​மக்​களிடம் ஒரு காசுகூட ‘யுபிஐ’ கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டாது என்றும் அதனை உறுதிசெய்ய புதிய கண்​காணிப்பு நடை​முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்திய நிதியமைச்சு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இந்தியாவில் 2016ஆம் ஆண்டு யுபிஐ மின்னிலக்கப் பணப் பரிவர்த்​தனை அறி​முகம் செய்​யப்​பட்​டது. தற்​போது​வரை கூகல்பே, போன் பே, பேடிஎம், பீம், அமே​சான் பே உள்​ளிட்ட யுபிஐ பணப் பரிவர்த்​தனைகளுக்குக் கட்​ட​ணம் விதிக்​கப்​பட​வில்​லை.

இந்நிலையில், தேசியப் பணப் பரிவர்த்​தனைக் கழகம் (என்​பிசிஐ) செப்டம்பர் 16ஆம் தேதி முக்​கிய அறி​விப்பை வெளி​யிட்​டது. அதன்​படி, ரூ.2,000க்கு மேற்​பட்ட வணி​கம் சார்ந்த யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு 0.4 விழுக்காடு வரை கட்​ட​ணம் விதிக்​கப்​படும். அக்​டோபர் 15ஆம் தேதி முதல் இந்தப் புதிய நடை​முறை நடப்பிற்கு வரும் என்று அறிவிக்​கப்​பட்டது.

எனினும், தனி​நபர்​களுக்கு இடையி​லான யுபிஐ பணப் பரிவர்த்​தனைக்குக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டாது என்று என்​பிசிஐ திட்டவட்டமாக தெரி​வித்துள்​ளது. வணி​கர்​களுக்​கான யுபிஐ கட்டண விவர​மும் முன்​கூட்​டியே வெளி​யிடப்​பட்​டிருக்​கிறது.

அதன்​படி, ரூ.2,000 வரையி​லான வணிக யுபிஐ பணப் பரிவர்த்​தனைக்குக் கட்​ட​ணம் கிடை​யாது. அதற்குமேல் ரூ.3,000 வரை ரூ.12, ரூ.50,000 வரை ரூ.200, ரூ.75,000க்குமேல் ரூ.300 கட்​ட​ணத்தை வணி​கர்​கள் செலுத்த வேண்​டும் என்று என்​பிசிஐ அறி​வித்​துள்ளது.

இதுதொடர்​பாக மத்​திய நிதி​யமைச்சு வட்​டாரங்​கள், “வணி​கர்​களுக்​கான யுபிஐ புதிய கட்டண நடை​முறை அக்​டோபர் 15ஆம் தேதி நடப்பிற்கு வரு​கிறது. பொதுமக்களிடம் அக்கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டாது என்று திட்​ட​வட்​ட​மாக அறிவிக்​கப்​பட்டாலும் யுபிஐ கட்டணத்தை வணி​கர்​கள் தங்​கள்மீது சுமத்​து​வர் என்ற அச்சம் பொது​மக்​களிடம் நில​வு​கிறது. இந்த அச்​சத்​தைப் போக்க புதிய கண்​காணிப்பு நடை​முறையை அமல்​படுத்த மத்​திய நிதியமைச்சு திட்​ட​மிட்டுள்​ளது,” என்று கூறின.

அவ்வகையில், வணி​கர்​களின் யுபிஐ வணிகப் பரிவர்த்​தனை​கள் நாள்​தோறும் கண்​காணிக்​கப்​படும். குறிப்​பாக ரூ.2,000க்கு மேற்​பட்ட வணி​கம் சார்ந்த யுபிஐ பரிவர்த்​தனை​கள் ஆய்வு செய்​யப்​படும். இதன்​மூலம் யுபிஐ கட்​ட​ணத்தைப் பொது​மக்​கள்மீது வணி​கர்​கள் சுமத்​து​வது முழு​மை​யாக தடுக்​கப்​படும்.

பொது​மக்​களிடம் யுபிஐ கட்​ட​ணம் வசூலிப்பது குற்​றம் என்றும் மீறி வசூலித்தால் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின்​சா​ரம், குடிநீர், சமையல் எரிவாயு, பெட்​ரோல், கைப்பேசி, காப்பீடு, பள்​ளி, கல்​லூரிக் கட்​ட​ணங்​கள் சார்ந்த வணிக யுபிஐ பரிவர்த்​தனை​யின்​போது பொது​மக்​களிடம் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட வங்கி நிர்​வாகத்​திடம் புகார் அளிக்​கலாம்.

அந்தப் புகார்​கள்மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இதுதொடர்​பான விரி​வான கண்​காணிப்பு நடை​முறை வரையறுக்கப்படும் வேளையில், முழு​மை​யான விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும் எனக் கூறப்பட்டது.

நாடு முழு​வதும் ஏறத்தாழ 86 விழுக்காட்டு யுபிஐ மின்னிலக்கப் பணப் பரிவர்த்​தனை​கள் தனி​நபர்​களுக்கு இடை​யில் நடைபெறுகின்றன. வணி​கம் சார்ந்து 14 விழுக்காட்டு யுபிஐ பரிவர்த்​தனை​கள் மட்​டுமே நடை​பெறுகின்​றன. எனவே, புதிய கட்​டண நடை​முறை​யால் யுபிஐ பரிவர்த்​தனை​கள் எந்த வகை​யிலும் குறை​யாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாநிதி அமைச்சுயுபிஐகட்டணம்அறிவிப்பு