சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையின் நந்தனம் வட்டாரத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில் புதிய பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ பூங்கா என்று அழைக்கப்படும் அதில் விளையாட்டுத் திடல்கள் உள்ளன. பூங்காவை மாநிலத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் நந்தனத்தில் இருக்கிறது. அங்கு மொத்தம் 3,750 சதுரமீட்டர் பரப்பளவில், 3.50 கோடி ரூபாய் செலவில் பூங்காவும் விளையாட்டுத் திடல்களும் நிறுவப்பட்டுள்ளன.
விளையாட்டுத் திடல்களில் பேட்மின்டன் விளையாட்டு அரங்குகள் மூன்றும், பிக்கிள் பந்து விளையாட்டு அரங்குகள் இரண்டும், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடமொன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மெட்ரோ பூங்காவைச் சுற்றி 370 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை, சிறுவர்கள் விளையாட்டுப் பகுதி, கழிவறைகள், வாகன நிறுத்துமிடம் எனப் பல்வேறு வசதிகள் உள்ளன.
பூங்காவில் மழை நீரைச் சேகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் செடிகொடி, மரங்களிலிருந்து உதிரும் இலை, தழைகளை உரமாக்கவும் குழிகள் இருக்கின்றன. பூங்காவையும் விளையாட்டு அரங்குகளையும் பொதுமக்கள் நன்கு பயன்படுத்துவதற்கு வசதியாக அண்ணாசாலையையொட்டி நுழைவாயிலொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

