புதுடெல்லி: மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் வரும் மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
விளையாட்டுகளைக் கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் பிரத்தியேகமாக புதிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
‘இ-ஸ்போர்ட்ஸ்’ எனப்படும் மின்னணுக் கருவிகள் மூலம் போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் இந்த ஆணையத்தில் தங்களை இனி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
பணப் பரிமாற்றம் இல்லாத சாதாரண சமூக இணயை விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் பதிவு செய்யத் தேவையில்லை என விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் எஸ். கிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், “பந்தயம் கட்டி விளையாடப்படும் இணைய சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஏற்கெனவே சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.
“திறமையை வெளிப்படுத்தும் ‘இ-ஸ்போர்ட்ஸ்’, ஆரோக்கியமான சமூக விளையாட்டுகள் ஆகியவற்றை ஊக்குவிக்க இந்தப் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
இந்தப் புதிய சட்ட வரைமுறை மூலம், இணைய விளையாட்டுத் துறையில் உள்ள வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அதேசமயம் தேவையற்ற கெடுபிடிகளைக் குறைத்து ‘இ-ஸ்போர்ட்ஸ்’ துறையை வளர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

