புதிய விதி: இந்தியச் சுற்றுப்பயணிகள் 15 நாள் மட்டுமே தாய்லாந்தில் தங்கமுடியும்

புதிய விதி: இந்தியச் சுற்றுப்பயணிகள் 15 நாள் மட்டுமே தாய்லாந்தில் தங்கமுடியும்

2 mins read
e413ba98-fac5-42be-a0c5-fa842e4e367b
எல்லைதாண்டிய குற்றச்செயல்களை முறியடிக்கும் நோக்கில் தாய்லாந்துச் சுற்றுப்பயண விதிகள் திருத்தப்பட்டுள்ளன. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: தாய்லாந்து தனது சுற்றுப்பயண விதிகளைத் திருத்திய பின்னர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 15 நாள்கள் வரை மட்டுமே சுற்றுப்பயண விசாவில் தங்கமுடியும்.

இதற்கு முன்னர், 2024 ஜூலை முதல் நடப்பில் இருந்த விதிகளின்படி இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணியாகத் தாய்லாந்து செல்வோர் விசாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தனர்.

விசா இல்லாத சுற்றுப் பயணத் திட்டத்தை அண்மையில் தாய்லாந்து அரசாங்கம் ரத்து செய்தது. அதனால், இந்தியா உள்ளிட்ட 93 நாடுகள் பாதிக்கப்பட்டன.

எல்லைதாண்டிய குற்றச்செயல்களைத் தடுக்கும் பொருட்டு திருத்தப்பட்ட சுற்றுப்பயண விதிகளுக்குத் தாய்லாந்து அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை (மே 19) ஒப்புதல் அளித்ததாக வெளியுறவு அமைச்சின் தூதரக விவகாரத்துறை கூறியது.

‘ஒரே நாடு ஒரே விசா விதிவிலக்கு முன்னுரிமை’ என்னும் புதிய வழிகாட்டிக் கொள்கைப்படி புதிய விதிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைவிட அவர்களின் தரத்தை மதிப்பிடுவதே அதன் நோக்கம்.

புதிய விதிகளின்படி, விசா இல்லாமல் தாய்லாந்தில் 60 நாள்கள் தங்கும் வசதி உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.

30 நாள் விசா விலக்கு அனுமதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 57லிருந்து 54ஆகக் குறைக்கப்படுகிறது.

புதிய 15 நாள் விசா விதிவிலக்கு சீசெல்ஸ், மாலத்தீவு, மொரிசியஸ் அகிய மூன்று நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது.

வருகை விசா வசதி அளிக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை 31லிருந்து நான்காகக் குறைக்கப்படுகிறது. இந்தியா, அஸர்பைஜான், பெலருஸ், செர்பியா ஆகிய நாடுகள் அவை.

இந்தியச் சுற்றுப்பயணிகள் கிட்டத்தட்ட ஈராண்டுகளாக எந்த ஓர் ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல் 60 நாள் விசாவின்றி தாய்லாந்தில் தங்கும் வசதியைப் பெற்று வந்தனர்.

இனி அவர்கள், தாய்லாந்து விமான நிலையத்தை அடைந்ததும், தேவைப்படும் ஆவணங்களையும் 4,600 ரூபாய் மதிப்புள்ள கட்டணத்தையும் செலுத்தி வருகை விசா பெறவேண்டும். அதற்காக, அவர்கள் விமான நிலைய வரிசைகளில் நிற்க வேண்டி இருக்கும்.

அந்த வருகை விசாவில் அதிகபட்சமாக 15 நாள்கள் மட்டுமே இந்தியச் சுற்றுப்பயணிகள் தங்கமுடியும். அதனை நீட்டிக்க முடியாது.

புதிய விதிகள் தாய்லாந்து அரசிதழில் வெளியிடப்பட்ட 15 நாள்களில் நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்