தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரன் தீவு எரிமலையைக் கண்டு ரசிக்க புதிய கப்பல் சேவை: தீவு நிர்வாகம் தகவல்

1 mins read
a4f97310-1cfb-4c38-b30e-70a4812e679c
பாரன் தீவு. - படம்: பிடிஐ

போர்ட் பிளேர்: அந்தமான்-நிக்கோபார் தீவுப்பகுதியில், இந்தியாவில் இன்னும் உயிர்ப்புடன் உள்ள ஒரேயோர் எரிமலையைக் கொண்டுள்ள பாரன் தீவுக்கு புதிதாக கப்பல் சேவை தொடங்கப்பட இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை அத்தீவு நிர்வாகம் செய்து வருகிறது.

விரைவில் போர்ட் பிளேரில் இருந்து சென்று, பாரன் தீவில் உள்ள எரிமலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் புதிய பயணக் கப்பல் சேவை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகத்தின் கப்பல் போக்குவரத்து ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சல் யாதவ் கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுற்றுப் பயணக் கப்பல் சேவை வழங்கப்படும் என்றார்.

இப்புதிய சேவை சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை வழங்கும் என்றும் எரிமலையின் கண்கவர் காட்சிகளை அனைவரும் கண்டு ரசிக்கலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போர்ட் பிளேரிலிருந்து கடல் வழியாக ஏறக்குறைய 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாரன் தீவு. இது அந்தமான் கடற்பகுதியில் உள்ள மக்கள் வசிக்காத தீவுகளில் ஒன்றாகும்.

கடந்த 1787ஆம் ஆண்டு இங்குள்ள எரிமலை முதன்முறையாக வெடித்துச் சிதறியது. அதன் பின்னர் 1991, 2005, 2017ஆம் ஆண்டுகளிலும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் 13 மற்றும் 20ஆம் தேதிகளிலும் பாரன் தீவு எரிமலை கொந்தளித்தது.

குறிப்புச் சொற்கள்