இந்தியா-தென்கிழக்காசியாவை இணைக்கும் புதிய கடலடிக் கம்பிவடம்

இந்தியா-தென்கிழக்காசியாவை இணைக்கும் புதிய கடலடிக் கம்பிவடம்

2 mins read
db05f84a-0aab-493b-b13e-789073d25bb1
இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை இணைக்கும் புதிய ‘ஐ-2எஸ்இஏ’ கடலடிக் கம்பிவடத்தை அமைக்க ‘மைக்ரோசாஃப்ட்’ மற்றும் லைட்ஸ்டோர்ம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்காளித்துவம் திட்டமிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமம் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை இணைக்கும் புதிய ‘ஐ-2எஸ்இஏ’ கடலடிக் கம்பிவடத்தை அமைக்க ‘மைக்ரோசாஃப்ட்’ மற்றும் லைட்ஸ்டோர்ம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்காளித்துவம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பங்காளித்துவத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ், சிங்டெல், ஆசியான் கேபிள்ஷிப் மற்றும் ஜப்பானின் என்இசி கார்ப்பரேஷன் ஆகிய முன்னணி நிறுவனங்களும் இணைந்துள்ளன.

ஏறத்தாழ 3,600 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தக் கட்டமைப்பு, மெட்டா மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்களின் தரவு மையங்கள் அமையவுள்ள இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் தரையிறங்கும் நிலையங்களைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடலடிக் கம்பிவடம் கட்டமைப்பு 2029ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்று லைட்ஸ்டோர்ம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமஜித் குப்தா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவின் 17 கடலடிக் கம்பிவடம் செயல்பாட்டில் உள்ளது. அவை அதிகபட்சமாக வினாடிக்கு 960 டெராபைட்ஸ் கடத்தும் ஆற்றல் கொண்டவை. மேலும், குறைந்தது பத்து கடலடிக் கம்பிவடங்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஆய்வு நிறுவனமான டெலிஜியோகிரஃபி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் செயல்பாட்டில் உள்ள தரவு மைய ஆற்றல் தற்போது 1.4 கிகாவாட்சாக உள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் இது இரட்டிப்படையக்கூடும்.

இந்த புதிய கட்டமைப்பு மூலம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமக் கட்டமைப்புகளின் இணைப்பு 19லிருந்து 29ஆக உயரும். தற்போது உலகளாவிய நிலையில் 95 விழுக்காடு இணையப் போக்குவரத்தைக் கடலடிக் கம்பிவடங்களே சுமந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், லைட்ஸ்டோர்ம் நிறுவனம் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடவும் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்