சென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி மையங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று பேர், விமானம் செங்குத்தாக புறப்படவும் தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது விமானங்கள் தரை இறங்க நீண்ட ஓடுபாதைகள் தேவைப்படுகின்றன. ஓடுபாதை நீளமாகவும் தரமாகவும் இருந்தால்தான் அளவில் பெரிய விமானங்களால் தரையிறங்கவும் புறப்படவும் இயலும்.
இதனால் சிறிய, இடப் பற்றாக்குறையுள்ள நகரங்களில் விமான நிலையம் அமைப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் முயற்சி உதவியுள்ளது.
ஐஐடியின் விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா, இணைப் பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா, ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் ஆகியோர் இணைந்து கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூவரும் நின்ற இடத்தில் இருந்தே ஒரு விமானம் செங்குத்தாக மேலெழும்பி பறக்க முடியும் என்றனர்.
முன்னோக்கிச் செல்லவேண்டிய அவசியம் இருக்காது என்று குறிப்பிட்ட மூவரும் விமானம் இறங்கும்போதும், அதேபோல் செங்குத்தாக இறக்கிவிட முடியும் என்று தெரிவித்தனர்.
“எனவே, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, விமானம் தரையிறங்க நீண்ட ஓடுபாதைகள் தேவைப்படாது. பெரிய விமான நிலையங்களை அமைக்க முடியாத கரடுமுரடான நிலப்பரப்புகளில் கூட இந்தத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“பல்வேறு இடங்களுக்கு விமானப் போக்குவரத்துச் சேவை சென்று அடைய முடியும். இந்த தொழில்நுட்பம் ராணுவப் போக்குவரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று மூவரும் தெரிவித்தனர்.
இந்தத் தொழில்நுட்பத்தை மூன்று ஆராய்ச்சியாளர்களும் வெற்றிகரமாகச் சோதனை செய்து காட்டியுள்ளனர். இது தொடர்பான இவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை, விமானப் போக்குவரத்து தொடர்பான உலகின் முன்னணி ஆய்விதழில் வெளியாகி உள்ளது.

