மின்னிலக்கத் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து செய்தி நிறுவனங்கள் வழக்கு

மின்னிலக்கத் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து செய்தி நிறுவனங்கள் வழக்கு

கோப்புப் படம்: சுப்ரீம்கோர்ட் அப்சர்வர்

28 Oct 2026 - 2:01 pm

2 mins read

புதுடெல்லி: இந்திய அரசு இயற்றியுள்ள மின்னிலக்கத் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கடுமையான விதிகளுக்கு 21 முன்னணிச் செய்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, மின்னிலக்கச் செய்தி வெளியீட்டாளர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

செய்தி வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை, ஊடகச் சுதந்திரத்தைப் பெருமளவில் முடக்கும் என்று அந்த ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில், ஊடகங்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், செய்தி சேகரிக்கும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு அனுமதி பெற வேண்டியிருந்தால், புலனாய்வுப் பத்திரிகையியல் முற்றிலும் முடங்கிவிடும் என்றார்.

மேலும், அத்தகைய நடைமுறை ஒரு மறைமுகத் தணிக்கை முறையை உருவாக்கும் என்றும் அவர் வாதிட்டார்.

மேலும், இந்தச் சட்டம் செய்தியாளர்களின் ரகசியத் தகவல் ஆதாரங்களை அரசு கண்டறியும் நிலையை ஏற்படுத்தும் என்றும் இதனால் பல செய்தி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிநபர் தனியுரிமைக்கும் ஊடகச் சுதந்திரத்துக்கும் இடையே சரியான சமநிலையைப் பேணுவது அவசியம் என்று குறிப்பிட்டனர்.

புதிய சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் அதன் தவறான பயன்பாட்டைத் தடுப்பது குறித்தும் தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு இந்திய அரசுக்கும் ஊடக அமைப்புகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், பிற வளர்ந்த நாடுகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுபோல், இந்தத் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில் செய்தியாளர்களுக்குத் தனி விலக்குகள் வழங்கப்பட வேண்டும் என்பதே செய்தி நிறுவனங்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்