புதுடெல்லி: இந்திய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி பலவீனம் அடைந்துவரும் நிலையில், ஆளும் பாஜக அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறது.
அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து, பாஜக தலைமை அக்குறிப்பிட்ட மாநிலங்களின் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, பிரச்சினைகளை ஆய்வு செய்து, அடிமட்டத் தொண்டர்களின் தயார்நிலையை மதிப்பிட்டு வருகிறது.
இதற்காக, மூன்று மாநிலங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகள், கட்சித் தலைமையின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டு களத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்குச்சாவடி மேலாண்மை கட்டமைப்பு, உள்ளூர் தொண்டர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, அந்தந்தப் பகுதிகளைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவது என மக்களை நெருங்குகிறது பாஜக.
“24 மணிநேரமும் அரசியல் செய்யும் கட்சி என்று குறிப்பிடப்படும் பாஜக, மாநிலத் தேர்தல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாராகத் தொடங்கிவிடும். அதுவே அவர்களின் வெற்றி ரகசியம்,” என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் தவிர, 2027ல் மேலும் நான்கு மாநிலங்களில் களப்பணிகளைத் தொடங்கிவிட்டது பாஜக என்று வட இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் கிடைத்த வெற்றி, பாஜகவுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளதால் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்திலும் மேற்கு வங்கத் தேர்தல் உத்தியைக் கையாள அக்கட்சி விரும்பக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக உள்ளூர் பிரச்சினைகள், வாக்காளர்களின் மற்ற கவலைகள் குறித்து களத்தில் உள்ள தொண்டர்களிடம் இருந்து முதலில் கருத்துகள் சேகரிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இதன் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் 17 தொகுதிகள், உத்தரப் பிரதேத்தில் 75 தொகுதிகள், பஞ்சாப்பில் 117 தொகுதிகளில் கருத்துக்கேட்புப் பணி தொடங்கியுள்ளது.
நீண்ட கால அரசியல் உத்திகளை வகுக்க, 80 நாடாளுமன்றத் தொகுதிகளை அடக்கிய உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது.

