புதுடெல்லி: எட்டு மாநிலங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை (மே 31) மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கை காரணமாக பரபரப்பு நிலவியது.
மொத்தம் 15 இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது மின்னிலக்கக் கருவிகள் உட்பட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்தது. மேலும், தாய்நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் சில யூடியூபர்கள், அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவர்களுக்கும் பயங்கரவாத கும்பல்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், சனிக்கி்ழமையன்று எட்டு மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தியது.
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றதாக மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அசாம், மேற்கு வங்காளம் ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது முக்கியமான நிதி ஆவணங்கள், மின்னிலக்கக் கருவிகள் உள்பட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் என்ஐஏ தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை கைதானவர்களுக்கு உளவு பார்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டதா, அவர்களின் பின்னணியில் இருந்து செயல்படுவது யார் என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய வீரர் கைது
இதனிடையே, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மாதம் ரூ.3,500 பெற்றுக்கொண்டு, இந்திய ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மோதி ராம் ஜாட் என்ற அந்த வீரர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர் என்ற போர்வையில் தன்னுடன் நெருக்கமாகப் பழகிய பெண்ணிடம் அவர், இந்திய ராணுவத்தின் முக்கியமான நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளளார்.
குறிப்பாக, தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இடமான பஹல்காமில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், ராணுவத் துருப்புகளின் நடமாட்டங்கள் மற்றும் இது தொடர்பான உளவுத்துறையின் அறிக்கைகளையும் மோதி ராம் பகிர்ந்திருப்பதைப் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.