அருணாச்சலப் பிரதேசத்தில் ஒன்பது பேர் மாயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒன்பது பேர் மாயம்

1 mins read
5dfe591b-292d-41ac-b37a-c6b78b00d803
ஒரே வாரத்தில் இரண்டாவது முறை ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கேயி பான்யோர் மாவட்டம் உருத் தெரியாமல் மாறியிருக்கிறது. - படம்: பினான்ஷியல் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

இட்டாநகர்: இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் இயற்கை சீற்றத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது. அங்குள்ள லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள சிசிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 9 பேர் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற ரப்பர் படகு ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மீட்புப் பணியில் பெரும் பின்னடைவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில் தவித்த மூவரை மீட்டுக்கொண்டு எழுவருடன் மீட்புக்குழு சென்ற அந்த அதிநவீன ரப்பர் படகு ஆற்றின் அதிபயங்கர சுழலில் கட்டுப்பாட்டை இழந்து அடித்துச் செல்லப்பட்டது.

தற்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கவும் மாயமானவர்களைக் கண்டுபிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்த, மனிதர்கள் செல்ல முடியாத அடர்ந்த பகுதிகளுக்குச் செல்ல படகு மற்றும் மூன்று யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போதைய வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்து தேடுதல், மீட்புப் பணிகளில் ராணுவ ஹெலிகாப்டர்களைக் களமிறக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளதாக அருணாச்சலப் பிரேதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் கேயி பான்யோர் மாவட்டத்தில் பெய்த கனமழை, திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை 3ஆக அதிகரித்தது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி ஓய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்