தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்யின் கடலலைக் கூட்டத்தில் ஒன்பது வயது சிறுமி காணவில்லை

2 mins read
e3d3e043-0062-40cc-b8ea-3f04f9bd33f0
பெருங்கூட்டத்தில் ஒன்பது வயதுச் சிறுமி காணாமல் போனார். - படம்: பிடிஐ
multi-img1 of 2

கரூர்: அரசியல்வாதியாக மாறிய நடிகர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் ஒன்பது வயது சிறுமி காணாமல் போனார்.

இந்தக் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் 10,000 பேர் திரள்வார்கள் என மதிப்பிடப்பட்டது. ஆனால் 27,000 பேர் இருந்ததாக காவல்தரப்பு கூறுகிறது.

ஆனால் உண்மையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் 50,000 பேர் திரண்டதாகச் சொல்லப்படுகிறது.

கடலலை போன்ற கூட்டத்தில், மக்கள் ஒரு பக்கம் வேகமாக நகரத் தொடங்கியதால் குழப்பமும் நெரிசலும் ஏற்பட்டு ஒன்பது வயது சிறுமி காணாமல் போனார். அந்தச் சிறுமி அந்தச் சமயத்தில்தான் கடைசியாகக் காணப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி என்று ரசிகர்களால் ஆதரவாளர்களால் அழைக்கப்படும் விஜய், உடனே தனது உரையை நிறுத்தி கூட்டத்தை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதால் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உதவும்படி கூறினார்.

சிறுமி காணாமல்போன தகவல் வெளியானதும் “தயவுசெய்து காவல் துறையினர் உதவி செய்ய வேண்டும்,” என்றும் தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் மயங்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டனர். சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெருங்கூட்டத்தில் அவசர வாகனங்கள் வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

தமிழக முதர்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரான அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும், சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார். இறந்தவர்களுக்கு அவர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய அதிபர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்