நிபா கிருமித்தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது: இந்திய அரசு அறிவிப்பு

நிபா கிருமித்தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது: இந்திய அரசு அறிவிப்பு

2 mins read
8dffc16b-1d89-49e2-89da-96da9ada5e95
கடந்த 2001 முதல் இந்தியாவில் எட்டு முறை ‘நிபா’ தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோல்கத்தா: இந்தியாவில் ‘நிபா’ கிருமித்தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் இருவர் ‘நிபா’ கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதை இந்திய அரசு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) உறுதி செய்தது. அதன் பின்னர் தொற்றுப் பாதிப்புச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்பதையும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்த அறிவிப்பை அடுத்து தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதுடன், சுகாதாரப் பரிசோதனைகளையும் மேற்கொள்கின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பதிவான இரண்டு தொற்றுச் சம்பவங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் கூடுதல் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

மாநிலத் தலைநகரான கோல்கத்தாவின் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்றுப் பாதிப்பு இருப்பது ஜனவரி 11ஆம் தேதி பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. பின்னர் 13ஆம் தேதி தொற்றுப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இருவருக்கும் மூளைக் காய்ச்சல், நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், ஒருவர் குணமடைந்தார், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இருவருடனும் தொடர்புள்ள 196 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதில், யாருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியானது.

இதனிடையே, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேவையான அனைத்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2001 முதல் இந்தியாவில் எட்டு முறை ‘நிபா’ தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கு வங்கத்தில் இப்போதுதான் தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது. 2007ல் ஐந்து பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஐவரும் மரணமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்திள் 2025 டிசம்பர் 22ஆம் தேதி, 55 வயது பெண் ஒருவர் கடும் சுவாசக் கோளாறு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள இரு சுகாதாரப் பணியாளர்களுக்கும் அவரிடம் இருந்து தொற்று பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்