கோழிக்கோடு: இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற வன்போலிக் காணொளியை நம்பி இணையவழி வணிகத்தில் முதலீடு செய்த முதியவர் ஒருவர் ரூ.1.41 கோடியை இழந்துவிட்டார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், நொச்சாட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துரகுமான், 63. அண்மையில் ‘ஃபேஸ்புக்’ தளத்தைப் பயன்படுத்தியபோது, அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஒரு காணொளியைப் பார்த்தார்.
அதில் குறிப்பிட்ட இணையவழி வணிகத் தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை உண்மையென நம்பிய அப்துரகுமான், காணொளியுடன் இணைக்கப்பட்டிருந்த இணையத்தள முகவரிக்கான இணைப்பைச் சொடுக்கி, மோசடிக் கும்பலின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தொடங்கினார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி முதல் 2026 நவம்பர் 4ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தனது இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து 30 பரிவர்த்தனைகள் மூலமாக மொத்தம் ரூ.1.41 கோடியை மோசடியாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினார்.
ஆனால், உறுதியளிக்கப்பட்ட லாபத் தொகையோ அல்லது தாம் முதலீடு செய்த அசல் தொகையோ திரும்பக் கிடைக்காததால், தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
பணத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தொடக்கத்தில் புகார் அளிக்காமல் இருந்த அவர், இறுதியாகக் கோழிக்கோடு ஊரக இணையக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
