கோரப்படாத பணத்தை உரியவர்களிடம் வழங்க வங்கிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்து

2 mins read
e6121609-d4c8-4172-8fe6-8c4272df6f14
வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் பணத்தை உரியவரிடத்தில் வழங்க வங்கிகளுக்கு உத்தரவு. - படம்: ஊடகம்

புதுடெல்லி: வங்கிகளில் கிடக்கும் கோரப்படாத தொகையை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் புதன்கிழமை (ஜூன் 10) 29வது நிதி நிலைத்தன்மை, மேம்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், மாவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவதன் மூலம் உரிமை கோராத தொகைகளின் சட்டப்பூர்வ உரிமையாளர்களுக்கு பணத்தை ஒப்படைக்கும் நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த இயக்கம், இந்திய ரிசர்வ் வங்கி , செபி, பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வங்கிகள், ஓய்வூதிய முகமைகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

குறிப்பாக, வங்கிகள், பங்குச் சந்தைகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் உரிமை கோராத தொகைகளை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாமாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை குறித்த புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. அதன்படி. வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ஆண்டுக்கு 26 விழுக்காடு உயர்ந்து ரூ. 78,213 கோடியாக இருந்துள்ளது.

அதேபோல, 2023ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் வைப்புத்தொகையாளர் கல்வி, விழிப்புணர்வு நிதியத்திடம் உள்ள தொகை ரூ. 62,225 கோடியாக இருந்துள்ளது. வங்கிகளில் கோரப்படாமல் கேட்பாரற்றுக் கிடக்கும் பணத்தை உரியவரிடத்தில் வழங்க வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை அதிகளவில் டெபாசிட் செய்தனர். அதை நிறையப் பேர் மீண்டும் எடுக்கவே இல்லை. இதுபோன்ற சூழலில், கோரப்படாத தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்