மழை பெய்யாததால் தமிழகத்துக்கு காவிரி நீர் இல்லை: கர்நாடகா அமைச்சர்

மழை பெய்யாததால் தமிழகத்துக்கு காவிரி நீர் இல்லை: கர்நாடகா அமைச்சர்

2 mins read
b2850a5c-2242-4f92-9793-4aacbb53abd1
கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி. - படம்: இந்து தமிழ் திசை

பெங்களூரு: கர்நாடக மாநில அணைகளில் போதிய அளவு நீர் இல்லாததால் தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரை வழங்க இயலாத நிலை உள்ளது என்று அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை. குறைவான மழை காரணமாக எங்கள் அணைகளில் போதுமான நீர் இல்லை.

“அதனால், இப்போதைக்குத் தமிழகத்துக்கு தண்ணீரைத் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை.

“காவிரி நீர் திறப்பு என்பது முழுக்க முழுக்க மழையைப் பொறுத்தே இருக்கும். இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை,” என்றார் அவர்.

இதற்கு முன்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோதும் ராமலிங்கா ரெட்டி இதே கருத்தைக் கூறினார்.

“இந்த ஆண்டு மழைப் பொழிவு மிக மிகக் குறைவு. 150 ஆண்டுகளில் இல்லாத குறைவு இது. இதன் காரணமாக குடிநீருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது,” என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்தக் கடினமான காலத்தில் விவசாயிகள் கார்நாடக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களும், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் விவசாயத்துக்கு காவிரி நீரையே நம்பி இருக்கின்றன. இதில், சுமார் 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

குறுவை சாகுபடிக்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், போதிய நீர் இருப்பு இல்லாததால் அணை திறக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.77.50 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்