பெங்களூரு: இந்திய விண்வெளி முகமையைத் தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமோ இல்லை என இஸ்ரோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உற்பத்தி, செயல்பாட்டுப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் பரவின.
மேலும், இஸ்ரோ ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது அமைப்புகள், விண்வெளித் துறையைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கை குறித்தும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுப்பி, இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்குக் கடிதம் எழுதியிருந்தன.
இதையடுத்து, ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை என்றும் இஸ்ரோ ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும் இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, தேசிய, உத்திபூர்வத் திட்டங்கள், விண்வெளி அறிவியல் ஆய்வுகளில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து செயல்படும் என்றும் விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பது அதன் பங்கைக் குறைப்பதற்காக அல்ல என்றும் இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களைச் சந்தைப்படுத்துவதில் தனியார் துறை ஈடுபடும்போது, அடுத்தகட்ட மேம்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களில் இஸ்ரோ கூடுதல் கவனம் செலுத்த புதிய சீர்திருத்தங்கள் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ள இஸ்ரோ, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் இந்திய விண்வெளித் துறையின் விரிவாக்கமே தவிர, தனியார்மயமாக்கல் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.


