திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லை: கனிமொழி

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லை: கனிமொழி

2 mins read
291401a2-ae8d-4d84-958d-16bf556296d3
திமுக-காங்கிரஸ் கூட்டணி நீண்டகாலமாக நீடிக்கிறது என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார். - கோப்புப் படம்: த ஹாக்

புதுடெல்லி: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மாறுதலுக்கு வாய்ப்பில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசினார்.

“திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக பாஜக கூறுகிறது. முதலில் பாஜக தங்கள் கூட்டணியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். திமுக-காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக் கூடிய கூட்டணி. எனவே, கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை, மாறுதல் வர வாய்ப்பில்லை,” என்று கனிமொழி கூறினார்.

தமிழக அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை என்று கூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறித்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் கருத்து கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அவர், “பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இடம்பெறுவதில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டை அவர் முழுமையாகப் படித்துப் பார்த்தால் இளையர்களுக்கும், விளையாட்டுத் துறைக்கும் தேவையான பல முக்கியமான எதிர்காலத் திட்டங்கள் இருப்பதை அறியலாம். ஏதோ ஒரு காரணத்திற்காக வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் நடத்தும் அரசியல் நாடகம் சரியானது அல்ல,” என்றார்.

இதற்கிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி சோ்ந்திருப்பது முதல்வா் மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் விசிக மாவட்ட அலுவலகம் திறப்பு, அம்பேத்கா் மக்கள் கட்சி விசிகவுடன் இணைப்பு மற்றும் தோ்தல் நிதியளிப்பு என முப்பெரும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன்,திமுகவில் தேமுதிக சோ்ந்தது முதல்வா் மு. க.ஸ்டாலினின் ராஜதந்திரம் ஆகும். தேமுதிக எடுத்த நிலைப்பாடு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது எதிா்க்கட்சிகளுக்கு அதிா்ச்சி அளிப்பதாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்