சவூதி எறிகணைத் தாக்குதலில் இந்தியர் எவரும் இறக்கவில்லை: தூதரகம் விளக்கம்

சவூதி எறிகணைத் தாக்குதலில் இந்தியர் எவரும் இறக்கவில்லை: தூதரகம் விளக்கம்

1 mins read
4b087c03-4dff-495f-99a7-5c869d323a27
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் சண்டைக்கு இடையில், தாக்குதல் காரணமாக மார்ச் 5ஆம் தேதி சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள ஒரு கட்டடத்திலிருந்து வெளியான புகை. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் இந்தியர் எவரும் உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, அத்தாக்குதலில் இந்தியர் ஒருவரும் பங்ளாதேஷியர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்று சவூதியின் குடிமைத் தற்காப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தெரிவித்திருந்தது.

ஆயினும், அத்தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயமுற்றதாகவும் அவர் தற்போது அல் கார்ஜில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

“ஞாயிற்றுக்கிழமை மாலை அல் கார்ஜில் நிகழ்ந்த தாக்குதலில் இந்தியர் எவரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் நிம்மதி அளிக்கிறது. அதன் தொடர்பில் உரிய சவூதி அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் இருக்கிறது,” என்று எக்ஸ் தளம் வழியாக இந்தியத் தூதரகம் பதிவிட்டுள்ளது.

சமூக நல ஆலோசகர் ஒய் ஷபீர் ஞாயிற்றுக்கிழமை இரவு அல் கார்ஜுக்கு நேரில் சென்று, காயமடைந்த இந்தியரைச் சந்தித்தார் என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

அங்குக் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் பங்ளாதேஷியர் இருவர் கொல்லப்பட்டனர்; இந்தியர் ஒருவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக, சவூதியில் உள்ள இந்தியர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் அங்குள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இருந்தது.

அவசரகாலத் தொடர்பு எண்களையும் அது வெளியிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்