புதுடெல்லி: அமெரிக்க டாலரை வலுவிழக்கச் செய்வதில் இந்தியாவுக்கு விருப்பம் கிடையாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் மீது 100 விழுக்காடு வரி விதிக்கப்படக்கூடும் என்று அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். அதற்கு திரு ஜெய்சங்கர் பதிலளித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கத்தார் தலைநகர் டோஹாவில் சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் பேசினார். திரு டிரம்ப், முதலில் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரின் அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்த நல்லுறவை திரு ஜெய்சங்கர் சுட்டினார்.
“டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் நாம் வலுவான, அசைக்க முடியாத உறவைக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் வர்த்தகம் தொடர்பில் சில பிரச்சினைகள் இருந்தன. அதேவேளை, பல விவகாரங்களில் திரு டிரம்ப் முதல் அடியை எடுத்து வைத்தார். அதோடு, திரு டிரம்ப்பின் தலைமையில்தான் குவாட் கூட்டமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது என்பதை நான் மக்களுக்கு நினைவூட்டுகிறேன்,” என்று திரு ஜெய்சங்கர் விவரித்தார்.
திரு டிரம்ப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இருக்கும் வலுவான தனிப்பட்ட உறவு, இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்த வகைசெய்திருப்பதாகவும் திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.