புதுடெல்லி: இந்தியாவைக் காட்டிலும் முக்கிய கூட்டாளி வேறு யாரும் இல்லை என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகப் பொறுப்பேற்ற திரு செர்ஜியோ, திங்கட்கிழமை (ஜனவரி 12) டெல்லியில் தூதரகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதிபர் டோனல்ட் டிரம்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தொடர்புகொள்ள மறுத்ததே இருநாட்டு உறவின் கசப்புக்கு காரணம் என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்.
அந்த இரு தலைவர்களும் சந்திக்காததுதான் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடங்கியதற்கு முக்கியக் காரணம் என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அண்மையில் கூறியிருந்தார்.
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான அடுத்த சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்பதை கோர் உறுதிப்படுத்தினார்.
வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதில் உள்ள சிரமங்களை ஒப்புக்கொண்டார் அவர், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியாமீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 விழுக்காடு இறக்குமதி வரியை விதித்தார். அந்த வரி நான்கு மாதங்களுக்கும் மேலாக நடப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 விழுக்காடு வரி விதிப்பது பற்றி யோசிக்கப்படும் என்று அண்மையில் திரு டிரம்ப் மிரட்டி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்கத் தூதர் இந்தியா பற்றிய சாதகமான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
உண்மையான நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதனை அவர்களே பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என்றார் அவர்.

